சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் டகால்டி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சங்கரின் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விஜய் ஆனந்த், இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தைக் கையாண்டுள்ளார். டகால்டி படத்தின் டீசர் நேற்று ( டிசம்பர் 1) மாலை 4: 30 மணிக்கு வெளியிடப்பட்ட நிலையில் 1.4 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து, ஒரு லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது. சந்தானத்தின் சொந்த நிறுவனமான ஹேண்ட்மேட் பிலிம்ஸ் மற்றும் எஸ்.பி.சௌத்ரியின் 18 ரீல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ரித்திகா சென் நடித்துள்ளார். ஆக்ஷன், காமெடி, காதல் கலந்து உருவாகி இருக்கும் இந்த படத்தில் ராதாரவி வில்லனாக நடித்துள்ளார். டீசரில் வரும் காட்சிகளில் சந்தானமும் யோகிபாபுவும் போட்டி போட்டு காமெடி
சந்தானம், யோகி பாபுவைப் பார்த்து ‘நீ இவ்ளோ பெரிய நடிகனா வருவேன்னு எதிர் பாக்கலடா, என்னமா ஆக்ட் கொடுக்கிற’என்றும், அஜித் – விஜய்யை வைத்து படம் இயக்குவேன் என்று சொல்லும் கதாநாயகியிடம், ‘அப்புறம் சிறுத்தை சிவா-அட்லீ எல்லாம் என்ன பண்ணுவாங்க’ என்று கேட்டும் ரசிக்கவைக்கும்படி நக்கலாகப் பேசியுள்ளார். ‘அவன் பொண்ணோட வரலேன்னா, உன்ன துண்டு துண்டா வெட்டி அவனுக்கு பார்சல் அனுப்பிருவேன்’ என்று யோகிபாபுவிடம், ராதாரவி கூறுவதற்கு ‘அவன் இருக்கிற இடம் தெரியாம தானே என்ன அடிக்கிறீங்க அப்புறம் எப்படி அவனுக்கே பார்சல் அனுப்புவீங்க’ என்று கேட்கும் லாஜிக் காமெடி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. தீபக் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு விஜய் நரேன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்புப் பணிகளை டி.எஸ்.சுரேஷ் செய்துள்ளார். டகால்டி திரைப்படம் இந்த மாதம் ரிலீசாகவுள்ளது. யோகிபாபுவும் சந்தானமும் இணைந்து கலக்குவதால் டகால்டி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமையும்.