தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 14 நாட்கள் அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளார். தமிழகத்தில் தொழிற்துறையின் வளர்ச்சிக்காக வெளிநாட்டு முதலீடுகளைக் கவரும் வகையில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய முதல்வர், இரண்டாம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 3 லட்சத்து 431 கோடி ரூபாய் தொழில் முதலீடு செய்ய முன்வந்து, 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர், “தொழில் துறையில் முதலீடுகளை ஈர்க்க யாதும் ஊரே என்ற இணையதளம் ரூ.60 லட்சத்தில் தொடங்கப்படும். தொழில் வளர் தமிழகம் என்ற அடையாளத்துடன் கூடிய இணையதளம் அமைக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
தொழில் தொடங்க உகந்த மாநிலமாகத் தமிழ்நாடு இருப்பதால் இங்கு பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க விரும்புகின்றன. இந்த நிலையில் மேலும் வெளிநாட்டு முதலீடுகளைக் கவருவதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 5 நாடுகளுக்கு முதல்வர் சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறார். 14 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்தச் சுற்றுப் பயணத்தில் வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழகத் தொழிலதிபர்களிடம் தமிழகத்தில் தொழில் தொடங்க முதல்வர் கோரிக்கை வைக்க இருக்கிறார். வரும் 18ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் பயணத்தில் சில அமைச்சர்களும் அதிகாரிகளும் முதல்வருடன் செல்லவுள்ளனர். யாதும் ஊரே இணையதளத் திட்டத்தின் கீழ் முதலீடுகளைக் கவரவும் சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளை மேம்படுத்துவது குறித்து அறிந்து கொள்வதற்காகவும் இந்தப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.முதல்வரின் இம்முயற்சியால் தமிழகத்தின் பல்வேறு துறைகளுக்கும் அதிகளவில் முதலீடுகள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.