mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / கலைஞர் வழியில் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடுவோம்: மம்தா

கலைஞர் வழியில் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடுவோம்: மம்தா

August 8, 2019 10:37 am

கலைஞரின் வழியில் நின்று சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடுவோம் என்று ஒய்எம்சிஏ திடலில் நடந்த பொதுக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் (ஆகஸ்ட் 7) அனுசரிக்கப்பட்டது. அதை முன்னிட்டு சென்னை கோடம்பாக்கத்திலுள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் கலைஞரின் சிலை திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு சிலையைத் திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ திடலில் கலைஞர் நினைவு நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

அதில் சிறப்புரையாற்றிய மம்தா பானர்ஜி, “இந்திய தாயின் தலைமகன்களில் ஒருவரான கலைஞர் தமிழகத்தின் தந்தை போன்று விளங்கியவர். அவருடைய திட்டங்கள், சிந்தனைகள், பணிகள் என்றென்றும் மறக்க இயலாதவை. கலைஞர் மறைந்து ஒரு வருடம் ஆகிவிட்டாலும் அவருடைய நற்பணிகள் மூலம் நம் இதயங்களில் என்றென்றும் வாழ்ந்து வருகிறார். கிராமப்புற, அடித்தட்டு மக்களின் நலனுக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவர். மாநில உரிமைகளைப் பாதுகாக்கத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். எப்போதும் கூட்டாட்சி தத்துவத்துக்குக் குரல் கொடுத்தவர். கலைஞரின் வழியில் நின்று தற்போது நாட்டில் நிலவும் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராட வேண்டும்” என்று புகழாரம் சூட்டினார். தொடர்ந்து, “தற்போது ஒரே தேசம், ஒரே மதம் என்ற முயற்சியைக் கொண்டுவர முயற்சி செய்கிறார்கள். ஆனால், நாம் அனைத்து மதங்களையும், நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் விரும்புகிறோம். என்னுடைய நாடு இந்தியாவாக இருந்தாலும் நான் பிறந்தது வங்க நாட்டில். இதேபோல் ஸ்டாலின் இந்தியாவில் இருந்தாலும், அவர் பிறந்தது தமிழ்நாட்டில். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு அடையாளம் உண்டு. ஓர் உரிமை இருக்கிறது. அது அழியாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். மத்திய அரசு ஒரு முடிவெடுக்கிறது என்றால் அந்த மாநில மக்களின் கருத்துகளைக் கேட்க வேண்டும்” என்று தெரிவித்தவர், “தமிழக மக்கள் மிகவும் தைரியமான மனம் படைத்தவர்கள். தமிழர்கள் புலியைப் போன்றவர்கள், நீங்கள் உங்கள் மாநிலத்துக்குக் குரல் கொடுப்பது பெருமையாக உள்ளது. எதிர்காலத்தில் பெரும் சவால்களைச் சந்திக்க வேண்டிய பொறுப்பு இந்திய இளைஞர்களுக்கு உள்ளது. மேற்கு வங்கத்துக்கும் தமிழகத்துக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. இரண்டு மாநிலத்திலும் ஒன்றாகத் தேர்தல் நடக்கப் போகிறது. நாம் ஒன்றாக வெல்ல வேண்டும். நமது வெற்றியை மக்களுக்கு நாம் பரிசளிக்க வேண்டும். ஜெய் பெங்கால்… ஜெய் தமிழ்நாடு” என்று கூறி பேச்சை நிறைவு செய்தார். அதையடுத்து நன்றியுரையாற்றிய ஸ்டாலின், “கலைஞர் என்றால் சமூக நீதியும் மாநில சுயாட்சியும் என்றுதான் பொருள். பகுத்தறிவு, சுயமரியாதை, மொழிப்பற்று, இனப்பற்று, சமூக நீதி, மாநில சுயாட்சி ஆகியவற்றுக்கு தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே முன்பைவிட கலைஞர் தற்போதுதான் அதிகமாகத் தேவைப்படுகிறார். பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேறுவதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான் சமூக நீதி எனப்படும் இட ஒதுக்கீடு. அந்தக் கொள்கைக்கு உலைவைக்கும் வகையில் இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைக் கொண்டுவந்துள்ளனர். இட ஒதுக்கீட்டால் தகுதி, திறமை போய்விட்டது என்றவர்கள், தற்போது தங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டதும் அதை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்” என்று விமர்சித்தார். “மாநில சுயாட்சிக்கு எதிராக ஒரே நாடு, ஒரே தேர்வு, ஒரே தேர்தல், ஒரே அடையாள அட்டை என அனைத்தையும் டெல்லியில் குவித்துக்கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு என்பது மத்தியபடுத்தப்பட்ட அரசாக மாறியுள்ளது. அதனால்தான் கலைஞர், ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்று சொன்னார்” என்று குறிப்பிட்டவர், நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் தினமும் போரிடுவதைப் பார்த்திருந்தால் கலைஞர் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்திருப்பார் எனவும் மாநில உரிமைகளுக்காக எம்.பி.க்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள் என்றும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய ஸ்டாலின், “இன்று உச்சக்கட்டமாக காஷ்மீர் பிரச்சினை எழுந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்க வேண்டிய ஃபரூக் அப்துல்லா, காஷ்மீரில் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காஷ்மீரத்து சிங்கம் என அழைக்கப்பட்ட ஷேக் அப்துல்லாவின் மகன் அவர். முன்பு ஷேக் அப்துல்லாவின் முதல்வர் பதவி பறிக்கப்பட்டு தமிழகத்தின் கொடைக்கானலில் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அந்தக் கறுப்பு வரலாற்றை மீண்டும் உருவாக்க நினைக்கிறார்கள். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படக் கூடாது என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு. பலர் நமக்குத் தேசபக்திப் பாடம் எடுக்கிறார்கள். இந்தியாவுக்கு சீனாவிடமிருந்தும் பாகிஸ்தானிடமிருந்தும் பிரச்சினை எழுந்தபோது, நாட்டின் பக்கம்தானே நின்றோம். அப்படிப்பட்ட எங்களுக்கு பாஜக, தேசபக்திப் பாடம் எடுக்கிறது. தேசபக்தியின் பெயரால் மதவாதத்தைத் தூண்டினால், பாஜகவை உறுதியாக எதிர்ப்போம்” என்று கூறினார்.

About CmsnewsAdmin@123

Check Also

ஆவணங்கள் ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது: பொன்.மாணிக்கவேல்

சிலைக் கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் ஆவணங்கள் ஒப்படைக்கப்படும் என்றும் ஓய்வுபெற்ற ஐஜி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *