mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / அதிமுக முன்னாள் கவுன்சிலரை கைது செய்யாதது ஏன்?: நீதிமன்றம்!

அதிமுக முன்னாள் கவுன்சிலரை கைது செய்யாதது ஏன்?: நீதிமன்றம்!

September 26, 2019 12:06 pm

சட்டவிரோத பேனர் விழுந்து இளம் பெண் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில், முக்கிய குற்றவாளியான அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் (செப்டம்பர் 25) கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் வைக்கப்பட்ட அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண விழா பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்தது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.
இன்றைய விசாரணையின் போது திமுக சார்பில், ”பேனர் வைத்த ஜெயகோபால் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் போலீஸ் கைது செய்யவில்லை. விசாரணையை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்ற வேண்டும். டிஜிபி கண்காணிக்க உத்தரவிடவேண்டும்” என வாதிடப்பட்டது. இவ்வழக்கில் சென்னை மாநகராட்சி சார்பிலும், காவல்துறை சார்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி அறிக்கையில், சம்பந்தப்பட்ட உதவிப் பொறியாளர், செயற் பொறியாளர் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அறிக்கையில், பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், ஜெயகோபாலை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுத் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது அரசுத் தரப்பிடம் நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். முக்கிய குற்றவாளியான ஜெயகோபாலை இன்னும் கைது செய்யாதது ஏன்? சட்ட விரோதமாக அவர் பேனர் வைத்த நிலையில் லாரி ஓட்டுநர் வழக்குடன், அவரது வழக்கைச் சேர்த்தது ஏன்? அவர் இங்கு இருக்கிறாரா? அல்லது வெளிநாடு சென்றுவிட்டாரா? அவர் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டனர். இதனைத் தொடர்ந்து ஜெயகோபாலை கைது செய்ய எடுத்த நடவடிக்கை குறித்து சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் மற்றும் போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையர் அறிக்கை அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், மொத்த வழக்கையும் சென்னை காவல் ஆணையர், கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை அடுத்த மாதம் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்த விசாரணையின் போது, பேனர் வைக்கக் கூடாது என்று கட்சியினரை அறிவுறுத்துவது தொடர்பாக அதிமுக சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தாங்கள் நேரில் சென்று பேனர்களை எடுக்கவில்லையே தவிர அனைத்து உத்தரவுகளையும் பிறப்பித்துவிட்டதாக அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

About CmsnewsAdmin@123

Check Also

டிரம்ப் பதவிக்காலம் கேள்விக்குறி!

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வது தொடர்பான குற்றச்சாட்டுகளை பிரதிநிதிகள் சபை பதிவு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *